யோகம்
யோகம் என்பது இணைப்பது என்பார்கள். அதாவது ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைக்கும் சாதனைகளை யோகம் என்று குறிப்பிடுகிறோம்.
அப்படியென்றால் அந்த இணைத்தல் என்ற முயற்சிக்குத் தடையாக ஏதோ ஒன்று இருக்கிறது. அந்தத் தடையை தகர்ப்பது கடினம் என்பதினால்தான், அதைச் சாதனை என்கிறார்கள் என்பது யாரும் சொல்லாமலேயே தெரிந்து விடுகின்றதல்லவா ?
உடல், மனம், உயிர் என்ற மூன்றில் உடலுக்குள் ஆத்மா உயிராக இருக்கும் வரை ஜீவாத்மா எனப்படுகிறது. ஆக ஜீவாத்மா, மனம், பரமதாத்மா என்ற மூன்றில், ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையில் நிற்பது மனம்தானே ? இந்த மனதை ஒடுக்குவதுதான் யோகமே தவிர, இணைப்பதல்ல. இணைப்பது என்பது விளைவு.
இதில் ஒருவர் தன்னுடைய இயல்புக்கு ஏற்ற யோகத்தையே அனுசரிக்க வேண்டும், அப்பொழுதுதான் மனம் வசப்படும், இணைப்பு சாத்தியமாகும்.
தமோ குணம் அதிகமுள்ளவர்களுக்கு கர்ம யோகம் சிறந்தது. ரஜோ குணம் உள்ளவர்களுக்கு பக்தி யோகம் சிறந்தது. சத்துவ குணம் நிரம்பப் பெற்றவர்களே ஞான யோகத்தை அனுசரிப்பதற்குத் தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள். அந்தந்த யோக நிலைகளில் தீவிரமாக ஈடுபட்டு மேன்மையடைந்தவர்கள் பலர் வாழ்ந்து முக்தி நிலை ஏய்தியிருக்கிறார்கள்.
தமோ குணம் அதிகமுள்ளவர்களுடைய ஆற்றல் அவர்களிடத்தில் வெளிப்படாமல் உள்ளே மறைந்து கிடக்கும். அந்த ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு அல்லது மேலும் வலிமையுடையதாக்கி செயல்படுத்த அவர்கள் உடலாலும், மனதாலும் செயல் புரிய வேண்டும். இந்த உடலைக் கொண்டு, பலன் மீது பற்று இல்லாமல் கடவுளுக்காக பணி செய்வதையே கர்ம யோகம் என்பர். அந்த கர்ம யோகிக்கு மனதில் பரோபகார சிந்தனையும், கடவுள் சிந்தனையும் மேலோங்கி வரும் போது அவர் இராஜயோகி ஆகிவிடுவார். தமோகுணம் மிகுந்துள்ள மனதைப் பண்படுத்த கர்ம யோகமும், இராஜ யோகமும் சிறந்த வழிகளாகத் திகழ்கின்றன. இதனால் உடலிலும், உள்ளத்திலும் ஆற்றல் பெருகுவதோடு, சித்தம் சுத்தியடைகிறது.
இரஜோ குணம் உள்ள மனிதன் உலக வாழ்வில் ஆசைகளுக்கு அடிமையாகி விடுகிறான். அவனுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகி விடுகிறான். மனதை ஐம்பொறிகள் வாயிலாக புற உலகில் செலுத்துவதால் ஆசை உருவெடுக்கிறது. அதே மனதை இறைவன்பாற் செலுத்தும் பக்தி யோகத்தை கடைபிடிக்கும் போது அவனுடைய ஆசை, மலங்கள் எல்லாம் நீங்கி விடுகின்றன. மனதின் இச்சா சக்தியானது பக்தியினால் உயிர்கள் அனைத்தையும் நேசிக்கின்ற அன்பாக மாறிவிடுகிறது. பக்தி யோகம் பேரன்பை வளர்ப்பதாகும்.
சத்துவ குணம் ஓங்கப் பெற்றவர்களுக்கு இயல்பாகவே புலனடக்கம் அமைந்துவிடுகிறது. பரஞானம் அவனுக்கு தெளிவாகவே விளங்குகிறது. அறநெறி இன்னது என்பதை இயல்பாகவே அவன் உணர்ந்துவிடுகிறான். மெய்பொருளில் மனதை நிலைபெறச் செய்து தியானிப்பது அவனுக்கு எளிதாக இருக்கிறது. இறைவனை உணர்வதற்குறிய பேரறிவை ஞான யோகம் இவர்களுக்கு வழங்குகிறது.
அம்பிகையை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று அழைப்பார்கள். நான்கு யோகங்களையும் ஒருங்கிணைந்து கடைபிடிப்பவர்கள் அம்பிகையின் சிறந்த உபாசகனாவான். அதாவது தமோ குணத்தையும், இரஜோ குணத்தையும் கர்ம யோகம், இராஜ யோகம், பக்தி யோகங்களை கடைபிடித்து சத்துவ குணமாக மாற்றி ஞான யோகத்தில் திளைப்பவன் அம்பிகையான வாலையின் அருளுக்கு பாத்தியப்பட்டவனாகிறான். அவர்களுடைய மனதில் பேரன்பு, பேராற்றல், பேரறிவு நிரம்பி வழியும்.
கர்ம யோகமும், இராஜ யோகமும் ஆற்றலை வளர்க்கும். பக்தி யோகம் அன்பை வளர்க்கும். ஞான யோகம் அறிவை வளர்க்கும்.
இதெல்லாம் சரி சாதாரண மனிதனுக்கு முக்தியே வாய்க்காதா ? வாய்க்கும். அவர்கள் நிலையில் அவர்கள் வாழ்வினை செம்மையாக ஒழுக்கமுடனும், நேர்மையாகவும் கடைபிடித்து வாழ்பவன் தானாகவே முக்தி அடைவான்.
ஒரு மரத்தில் பூவிலிருந்துதான் காயும், பழமும் வருகின்றன. பூவாக இருக்கும் போது வாசனைக்கும், காயாக இருக்கும் போது சுவைக்கும், பழமாக மாறும் போது இனிமைக்கும் உரியனவாக விளங்குகின்றன. இந்த இனிப்பு வருவதற்கு முன் எப்படி இருந்தது ? பூவாக இருக்கும் போது கசப்பாகவும், பிஞ்சாக இருக்கும் போது துவர்ப்பாகவும், காயாக இருக்கும் போது புளிப்பாகவும் இருந்தது. பிறகுதான் இனிப்பு வந்தது. இந்த இனிப்புதான் சாந்தம். இதுதான் சத்துவ குணம். இந்த இனிப்பு வந்தால் எல்லா பற்றும் போய்விடுகிறது. பற்றற்ற ஞானப் பழத்தின் மீது அனைவருக்கும் ஈர்ப்பு வந்து விடுகிறது. புளிப்பு இருக்கும் வரை பற்று இருக்கும். அப்போது காயைப் பறித்தால் காயிலும் நீர் வரும், காம்பிலும் நீர்வரும். அதாவது மரமும் காயை விட விரும்புவதில்லை, காயும் மரத்தை விட்டு பிரிய விரும்புவதில்லை. அதனால் தான் நீர்வருகிறது. ஆனால் இனிப்பு வந்து விட்டாலோ பழம் தன்னாலேயே இற்று கீழே விழுந்து விடுகிறது. பற்றற்றுப் போய்விடுவதால் நீரும் வராது. அதாவது அழாமல் ஆனந்தமாய் பிரியும்.
எந்தக் காலத்தில் எப்படி இருக்க வேண்டுமோ, அந்தக் காலத்தில் அப்படி இருந்தால் தானாகவே மோட்சம் என்கிற முக்தி நிலை வந்து விடும்.
- Ram Manohar
Comments
Post a Comment