அறம், பொருள், இன்பம், வீடு

அறம், பொருள், இன்பம், வீடு

உண்மை என்பது வேறு நிலையான நிரந்தர உண்மை என்பது வேறு. இந்த உடல் இப்போது இருக்கிறது. அது உண்மைதான். ஆனால், நாளை இருக்குமா ? சந்தேகம் தான். "ஊரும், உற்றாரும், யாரும் சதமல்ல" என்று பட்டினத்தார் சொல்வது இதைத்தான். 

ஆனால், உலகம் முழுவதிலும் எப்போதும் மாறாத, அழியாத உண்மை ஒன்று இருக்கிறது. அது ஏன் நமக்குத் தெரியவில்லை ? என்றால், நிலையற்ற உண்மைகளை பெரிதென எண்ணி நிலையான உண்மைகளை விட்டு விலகி நிற்பதேயாகும். அந்த நிலையான உண்மையோடு இணைந்து எப்பொழுதும் அந்த உணர்வு நிலையிலேயே இருப்பதே நம் உண்மையான இயல்பாகும். அதுவே தர்மம் அல்லது அறம் எனப்படும். நாம் நினைப்பது போல தானம் செய்வது மட்டும் தர்மமல்ல. அதாவது உலகில் காணும் எந்த ஒன்றும் அதனதன் இயல்பிலேயே இருப்பதே தர்மம் என்றும் அறம் என்றும் சொல்வார்கள். 

ஒவ்வொரு புனித நூல்களுக்கும் ஒரு சாராம்சம் இருக்கும். அந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் ஓரிரு வாக்கியங்களில் சுருக்கிச் சொல்லி விடுவார்கள். கீதையின் சாரம் "கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என்பது. பைபிளின் சாரம் "உன்னை நேசிப்பது போல் நீ பிறனையும் நேசி". இப்படி இந்த அடிப்படையில் வேதங்கள் கூறும் அனைத்து விஷயங்களும் ''தர்ம, அர்த்த, காம, மோக்ஷ" என்ற நான்கு வார்த்தைகளுக்குள் அடங்கி விடுகின்றன. 

இதையே தெய்வப் புலவர் திருவள்ளுவர் தனது திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்று அமைத்தார். அறத்துப்பால் சொல்வது தர்மம். பொருட்பால் சொல்வது பொருட்கள் அல்லது நாம் அடையும் பேறுகளைக் குறிப்பது. காமம் என்பது இன்ப நுகர்ச்சி அல்லது ஆசையைக் குறிப்பது. 

இதில் மோட்சம் சொல்லப்படவில்லையே என்று கேட்டால், இந்த மூன்றையும் முறையோடும், நெறியோடும், அளவோடும் கைகொள்பவன் மோட்சத்தை அடைவான் என்பதே கோட்பாடு. வேதம் சொல்வதையே குறள் சுருக்கமாகச் சொல்வதால்தான் அதை உலகப் பொதுமறை என்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து சமயத்தினரும், மக்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். உலகில் தமிழனே இல்லாமல் போனாலும் கூட திருக்குறள் இருக்கும். தமிழனுக்கு என்றும் அழியாத புகழ் சேர்க்கும் ஒரே விஷயம் திருக்குறள் மட்டுமே. அறம் அதாவது தர்மத்தைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது அர்த்த அதாவது பொருள் பற்றிப் பார்ப்போம். பொருள் என்றால் பணத்தை மட்டும் குறிப்பதல்ல. மனிதனின் அறிவை மயக்குகிற பிரபஞ்ச விஷயங்கள் அனைத்தும் அர்த்த என்கிற பொருளேயாகும். 

கண்ணால் காணும் செல்வம் பொருட் செல்வம். கண்ணால் காண முடியாத செல்வம் அருட் செல்வம் என்பார்கள். ஆனால், கண்ணால் காண முடியாத பொருட் செல்வங்களும் உண்டு. அவை அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம் போன்றவைகள். எனவே இந்தப் பொருட் செல்வத்தை தேடி அலையும் மனிதன் தனக்குள் கோடி சூரியப் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அருட் செல்வத்தை இழந்து நிற்கிறான். 

எனவேதான் வள்ளுவர்,
   
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணும் உள

என்கிறார். 

குறள் விளக்கம்

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

காமமும் இன்பம் துய்த்தல் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், காமம் என்பது இச்சை, தன்னிலை மறந்த ஆசை என்று சொல்லலாம். பெரும்பாலும் இருபாலினருக்குள்ளும் எழும் உடல் ரீதியான வேட்கையை, இச்சையை காமம் என்று சொல்கிறார்கள். எனினும், அது எல்லாப் பொருட்களின் மீது கொள்ளும் இச்சைக்கும் பொருந்தும். துணிகள் நிறைய ஒருவரிடம் இருக்கும். என்றாலும், புதிய டிசைன் போட்ட துணி வந்தவுடன் அதன் மீது ஆசை கொள்வது, நகைகள் மீது தீராத ஆசை கொள்வது இப்படி தேவைப்படுகிற அல்லது தேவைக்கு அதிகமான பொருள்கள் மீது ஏற்படும் இசைசையையே காமம் என்பார்கள். இது அறிவை மறைத்து மயக்கி விடும். மமதை, கர்வம் கூட ஒருவகையில் காமம்தான். இது மீண்டும் மீண்டும் ஆசையை வளர்த்து விடுவதால் மீளாத துயரத்தில் ஆழ்த்தி விடும். ஆனால், இறைவன் மீது கொள்ளும் காமம் ஒருவரை மேன்மையடையச் செய்யும். மீரா, ஆண்டாள், சிவகாமி இவர்களை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். 

இப்படி இந்த மூன்று விஷயங்களில் தன் இயல்பு மாறாமல் வாழ்பவர் எந்த சூழ்நிலையில் பிறந்தவராக இருந்தாலும் முக்தி அடைவது திண்ணம். இதையே மோட்சம் என்பார்கள். அதாவது அறத்தில் முறை, அர்தத்தில் நெறி, காமத்தில் அளவு இவற்றைக் கடைபிடித்து வாழ்பவர் முதுமையில் எளிதில் அவற்றையும் விடுத்து பற்றற்ற நிலையை அடைந்திருவார். முக்தி என்கிற போது அது இறையாற்றலாகிய பரமாத்மாவோடு கலந்து விடுவதே. கடலில் ஆறு கலந்து கடலாக ஆகிவிடுவது போல பரமாத்மாவாகவே ஆகி விடுவது. இதற்குத் தடையாக உள்ள பாசம், பந்தம், பற்று இவற்றை வேரறுக்க வேண்டும். பற்று என்கிற ஆசையினால் ஏற்படும் பந்தம் என்கிற பிணைப்பினால் உருவாகும் பாசம் என்கிற கட்டை அறுத்துவர் முக்தியடைவார். இதை அறிவினால் சாதிப்பவர்களும் உண்டு. உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சியினால் சாதிப்பவர்களும் உண்டு. இந்த பற்று, பந்தம், பாசம் மூன்றையும் உலகப் பொருள்களில் இருந்து பிரித்தெடுத்து இறைவன்பாற் செலுத்தி பக்தியால் சாதிப்பவர்களும் உண்டு. 

வேதத்தையே மறுப்பவர்கள் உண்டு. ஆனால், மேன்மைக்கு வழிகாட்டும் தமிழனின் திருக்குறளை மறுப்பவர்கள் உலகில் யாரும் இல்லை. 

- Ram Manohar

Comments

Post a Comment

Popular posts from this blog

பிரபஞ்சம் உருவானது எப்படி?

ஆழ்மன தியானம்