ஆழ்மன தியானம்

ஆழ் மனதைத் தொடர்பு கொள்ள, மனதின் மற்ற இயக்கங்கள் இல்லாத அமைதியான நிலை வேண்டும். கனவற்ற ஆழ்ந்த உறக்கம் என்பது கூட ஒரு வரம்தான். இதனால் ஆன்மிக முன்னேற்றங்கள் ஏதும் இல்லை, இது ஒரு ஜட உறக்கம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் கூட நம் அழுத்தமான எண்ணங்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகளுக்குத் தீர்வு அல்லது விடை அப்பொழுதான் பிறக்கின்றன என்பது மிகப் பெரிய உண்மையாகும். 

நமக்குத் தேவையான எந்த ஒரு விஷயத்தையும் அடைவதற்கு அல்லது நமது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மனம்தான் கருவியாக அமைகிறது. ஆனால், அதற்கு மனம் அமைதியாக இருக்க வேண்டும், மூளையின் செயல் திறன் வலிமையாக இருக்க வேண்டும். மனதைப் பொருத்த வரை புறமனம் மற்றும் நினைவு மனத்தை விட ஆழ்மனம்தான் வலிமை பெற்ற பகுதியாக விளங்குகிறது.

அதே சமயம் புறமனமும், நினைவு மனமும் இயங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்திலே ஆழ்மனதின் இயக்கம் நம் உணர்வுக்கு வருவதில்லை. புறமனதின், நினைவு மனதின் இயக்கங்கள் குறையும் பொழுதுதான் ஆழ்மனதின் சிந்தனைகள் வலிமையாகச் செயல்படுகின்றன. 

இதை நாம் அனைவருமே நம் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். தீர்க்க முடியாத ஏதோ ஒரு பிரச்சனையைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இரவு தூங்கி விடுவோம். காலையில் எழுந்தவுடன் பார்த்தால் அந்தப் பிரச்சனையின் தீர்வு மனத் திரையில் ஓடும். விஞ்ஞானி ஐசக் நியூட்டன் இது பற்றிய தன் வாழ்க்கை அனுபவங்களை பல இடத்தில் பதிவு செய்திருக்கிறார். நம் வலது பக்க மூளையின் செயல்பாட்டின் கீழ் இது அமைவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நமது வலது பக்க மூளையானது வார்த்தைகள், எழுத்துகளை விட உருவங்களைத்தான் ஏற்று பதிய வைத்துக் கொள்கிறது. உருவமற்ற எதையும் அது ஏற்றுக் கொள்வதில்லை. உருவங்களை வைத்துதான் அது அதற்கேற்ற வார்த்தைகளை நம் நினைவில் இருந்து எடுத்துக் கொள்கிறது. நாம் எந்த ஒரு விஷயத்தையோ, கதையையோ கேட்கும் பொழுது, அதன் உருவங்களை மனதில் வெளிப்படுத்துவது வலது பக்க மூளைதான். 

எனவே நாம் செய்ய வேண்டியது மீண்டும், மீண்டும் நாம் அடைய வேண்டிய விஷயத்தின் அல்லது தீர்க்க வேண்டிய பிரச்சனையின் உருவத்தை மனத்திரையில் ஓட விட்டுக் கொண்டே அது சம்மந்தமான எண்ணங்களை எண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படி நாள் முழுவதும் நினைவுக்கு வரும் பொழுதெல்லாம் நினைத்துக் கொள்வதோடு, இரவு படுக்கப் போகும் பொழுதும் அது பற்றிய சிந்தனையோடு தூங்கும் பொழுது அது நடந்து விடுகின்றது.

நாம் கேட்டதைக் கொடுக்கும் சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது. ஆனால், நாம் பல எண்ணங்களின் இடையூறு இல்லாமல் அமைதியான மனநிலையில் நின்று கொண்டு, வலிமையான எண்ணமாகக் கேட்கும் பொழுதுதான் அது கிடைக்கும். அதே சமயம் நிறைவேறும் என்ற உறுதியான நம்பிக்கையும் இருக்க வேண்டும். 

இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், அதிகாலையில் எழுந்தவுடனும் வெளி மனம் அடங்கி, ஆழ் மனம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நமது கோரிக்கைகளை வலுவாக வைத்தோமானால், சில தினங்களில் நம் கோரிக்கைகள் நிறைவேறும். படுக்கையில் இயல்பாகப் படுத்துக் கொண்டு, கண்களை மூடியபடி, மூச்சை இழுக்கும் பொழுதும், விடும் பொழுதும், உருவத்தையும், கோரிக்கையையும் நினைத்துக் கொண்டேயிருங்கள். அப்படியே தூக்கம் வரும் வரையில் செய்து கொண்டேயிருங்கள். அப்படியே மெல்ல மெல்ல தூக்கம் உங்களை ஆட் கொண்டாலும் கூட அந்த கோரிக்கை எண்ணமானது ஓடிக் கொண்டேயிருக்கும். அந்நிலையில் அது ஆழ்மனதை எட்டும். அதைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார்கள். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் உருவம் அவசியம்.

உறக்கம் வருவதற்கு முன் நாம் உறக்கமும், விழிப்புமில்லாத ஒரு மயக்க நிலைக்கு போவோம். அது வரையிலும் நாம் சிந்தித்துக் கொண்டிருந்த விஷயமும், அது சம்மந்தமான உருவமும் நம் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். அப்பொழுது அவை நம் ஆழ்மனதில் பதிவாகி விடுகின்றன. இதுவும் தியானம்தான். 

தியானம் என்பது என்ன ? ஒரே எண்ணத்தில் நிலைத்திருப்பதுதானே ? நம் ஆழ்மனம் என்பது அற்புத சக்தி வாய்ந்தது. ஏனெனில் அது நம் ஆத்மாவிற்கு மிக நெருக்கமானது. எனவே நம் கோரிக்கைகளுக்கு ஏற்ற புறச் சூழலை அது உருவாக்கிக் கொடுக்கிறது. இதனால் நம் காரியங்கள் கை கூடுகின்றன. மன அமைதி உடையவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். ஆனால், பரபரப்பான நவீன கால வாழ்க்கைச் சூழலில் மன அமைதி என்பது அரிதாக இருக்கின்றது. எனவே இரவு படுக்கச் செல்லும் பொழுதும், அதிகாலை விழிக்கும் பொழுதும் செய்வது நல்லது.

ஒரே நேரத்தில் பல கோரிக்கைகள், பிரச்சனைகளை முன்னிறுத்தக் கூடாது. ஏனெனில் எண்ணங்களின் வலிமை சிதறுண்டு போகும். எனவே ஒரே ஒரு கோரிக்கையை வலுவாக வைத்து, அது நிறைவேறிய பிறகு அடுத்த கோரிக்கையை வைக்கலாம். இது ஏதோ மாயா ஜாலமெல்லம் கிடையாது. இது சத்தியமான உண்மை. மனிதனின் ஆழ்மனதிற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. 

ஆனால், தீய கோரிக்கைகளை வைக்கக் கூடாது. உதாரணமாக பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு தீமை நடக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வலுவான எண்ணம் முதலில் நமக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதை எப்பொழுதும் மறந்து விடாதிருங்கள். உலகாய விவகாரங்களை இதில் விரைவாக சாதித்துக் கொள்ள முடியும்.
இதுவே ஆன்மிக முன்னேற்றம் பற்றிய கோரிக்கை என்று வைத்துக் கொண்டால், அது சற்று கால தாமதப்படும். ஏனெனில் நம் பழைய வினைப் பதிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து நம் மனம் முற்றிலும் தூய்மையடைய அந்த அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், அதுவும் சாத்திம்தான். 
நம் முன்னோர்கள் உருவ வழிபாடுகள் செய்தது இந்த அடிப்படையில்தான். காரியங்களில் விக்கினங்கள் ஏற்படாமல் இருக்க விநாயகர் உருவம், வீரம், தைரியம், வெற்றி, பகுத்தறிவுக்கு முருகன், எல்லா வித மேன்மைகளையும் அடைய சிவன் மற்றும் சக்தி, நம்மைக் காக்கவும், செல்வ வளம் பெறவும் விஷ்ணு, லட்சுமி, கல்விக்கு சரஸ்வதி, ஞானத்திற்கு தட்சிணா மூர்த்தி இப்படி கோரிக்கைகளுக்கேற்ற உருவங்களை சமைத்தனர். இடை விடாமல் அந்த தெய்வ வடிவத்தை மனதில் நினைத்து, அந்த கோரிக்கையை வைக்கும் பொழுது, அந்தக் காரியங்கள் நடக்கின்றன. அதனால்தான் எவ்வளவோ நாத்திகவாதிகள் வந்தாலும், விஞ்ஞானம் வளர்ந்தாலும் தெய்வ நம்பிக்கை என்பது அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அனைத்தும் ஆழ்மனதின் அற்புதங்களின் விளைவே.
சரியாக தூக்கம் வரவில்லை என்று சொல்கிறவர்களுக்கு, இது ஒரு அருமையான தீர்வு. கடின உழைப்பு உடையவர்கள் அயர்ந்து தூங்கி விடுவார்கள். ஆனால், இப்பொழுது பெரும்பாலும் நமக்கு உடல் உழைப்பு குறைவு. எனவே ஆழ்ந்த தூக்கம் என்பது அரிதாகி விட்டது. மனம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கனவு உறக்கத்தில்தான் நம் காலம் செல்கிறது. இதனால் ஆயுளும் குறைகிறது. மேற் கூறிய பயிற்சியை செய்பவர்களுக்கு உறக்கத்தில் வீணாகும் மூச்சும் கட்டுப்படும், ஆழ்ந்த உறக்கமும் எளிதில் வாய்த்து விடும். ஏனெனில் சீராக மூச்சு விட்ட படி கோரிக்கையை வைப்பதாலும், மனம் ஒரே எண்ணத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே தூங்கி விடுவதாலும் இது சாத்தியமாகிறது. இனி கனவுக்கே வேலையில்லை. அப்படியும் கனவு வேண்டும் என்று விரும்பினால் கூட பகல் கனவுதான் காண முடியும். 

- Ram Manohar

Comments

Popular posts from this blog

அறம், பொருள், இன்பம், வீடு

பிரபஞ்சம் உருவானது எப்படி?