தவம்

தவம் 

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு


- திருக்குறள் 266

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. இது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு.

சரி, எது தவம் ? அடக்கமும், அன்பும், பொறுமையும் வாய்ந்த வாழ்வுதான் தவமாகும்.

அத்தகைய வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் மட்டுமே கடமையைச் செய்பவர்கள்; மற்றவர்கள், ஆசையால் அலைக் கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபட்டு துன்பத்தில் உழல்பவர்கள் ஆவார்கள் என்பதே நுட்பமான கருத்தாகும். 

ஒருவர் தன்னை வருத்தி முழுப் பக்தியுடன் இறைவனை நோக்கி தவம் செய்தால், அதற்கு இறைவன் கட்டுப்பட்டு வரம் வழங்குவான் என்பதே தவத்தின் அடிப்படை கருத்தாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் தவம் என்பது இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், உயிரற்ற பொருட்களும் உருவாக காரணமான பேராற்றலை பற்றி விழிப்புணர்வு பெறுதலும் அவ்வாற்றலை வாழ்வில் பயன்படுத்தலுமே ஆகும்.

அப்படியானால் தவமிருந்து ஞானம் பெற்றார்கள் என்று சொல்கிறார்களே ? என்று கேட்டால், ஞானம் பெற்று உண்மையை உணர்வதற்காக செய்யப்படும் முயற்சிகளும் தவம் என்றே வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஒழுக்கமான வாழ்வே தவமாகும் என்பது கோட்பாடு. அதாவது தீவிர நோக்கமும், அதை அடைவதற்கான முயற்சிகளும் தவம் என்று சொல்லப்படுகின்றன. 

உலகில் காணும் மற்ற அனைத்து உயிரினங்களையும் உற்றுப் பார்த்தால், அவைகளிடத்தில் ஒவ்வொரு உயிரினங்களிலும் ஒவ்வொரு சிறப்பான ஆற்றல்கள் வெளிப்படுவதைக் காணலாம். ஆதலால் இவை அனைத்தையும் கடந்து பரிணாமத்தின் எல்லையாக விளங்கும் மனிதனிடத்தில், அத்தனை உயிரினங்களிடத்தில் விளங்கிய சிறப்பியல்புகளும் ஒரு சேர அமைந்திருக்கிறது. ஆனால், தனக்குள் இத்துனை ஆற்றல்கள் இருக்கின்றன என்பதை மனிதன் உணராமல் இருக்கிறான். அதற்குக் காரணம், புலனின்பப் பற்றுதலே ஆகும். இந்தப் பற்றுதல் இருக்கும் வரை மனம் இருக்கும். இந்தப் பற்றுதலை விட்டு விட்டால் மனம் இருக்காது. மனம் இருந்தால்தான் அவன் மனிதன். மனம் இல்லாதவன்... கடவுள் !!!

கண், காது , மூக்கு , நாக்கு, தோல் ஆகிய ஐந்து புலன்களில் ஒரு புலனின் செயல்பாடு குறைந்தாலும் மற்ற புலன்களின் ஆற்றல் அதிகமாகும். உதாரணமாக கண் பார்வை அற்றவர்களுக்கு கேட்கும் திறன் அதிகமாயிருப்பதைக் காணலாம். அப்படியானால், ஐந்து புலன்களுமே செயல்படாவிட்டால் என்னவாகும் ? என்று ஒரு நண்பர் கேட்டார். நான் சொன்னேன் மனிதன் செத்துப் போய்விடுவான் என்று. 

பிறகு ஏன் புலன்களை அடக்கு அடக்கு என்று சொல்கிறார்கள் ? அடக்குவது என்பது தன் வசப்படுத்துவது. அதாவது புறவுலக வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் மனதையும், புலன்களையும் வசப்படுத்தி அவற்றின் ஆற்றல்களை அகவுலகில் செலுத்த வேண்டும். இதுவே தவம். இவ்வாறு தவம் செய்யும் பொழுது நாம் ஐந்து புலன்களின் சலனங்களைக் குறைத்து நுண்ணிய மனோநிலைக்கு செல்கிறோம். பின் மனமற்ற நிலைக்கு செல்லுகிறோம். (இதை வேதங்களில் மனோநாசம் என்றும் சொல்லுவார்கள்.) அப்பொழுது உள்ளுணர்வு விழிப்படைகிறது .அப்பொழுது நம்மிலும் நம்மைச் சுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கும் பேராற்றல் உணரப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மூலமானது அந்த பேராற்றலே என்பது தெளிவாகிறது. நாமும் அவ்வாற்றலே என்பதையும் உணர்கிறோம். அதுவே ஞானமுமாகும்.

இதற்காண உபாயங்கள் அல்லது யுக்திகளே அஷ்டாங்க யோகங்களாக வடிவமைத்துத் தரப்பட்டுள்ளன. தவம் என்பது தியானத்தின் முதிர்ச்சி. தியானம் என்பது தாரணையின் முதிர்ச்சி. தாரணை என்பது பிரத்தியாகாரத்தின் முதிர்ச்சி. பிரத்தியாகாரம் என்பது புலனடக்கத்தின் முதிர்ச்சி. எனில் இந்தப் புலனடக்கம் எதனால் அமையும் ? மனதால் அமையும். மனம் சலனமடைந்தால் புலனடக்கம் அமையாது. மனம் எதனால் சலனமடைகிறது. மனம் ப்ராணனால் சலனமடைகிறது. எனவே ப்ராணனை வசப்படுத்தி, வலிமைப்படுத்த வேண்டியதிருக்கிறது. அதற்கு உடலும் வலிமையாக இருக்க வேண்டும். உடல் வலிமையாக இருக்க வேண்டுமானால் ஒழுக்கமான வாழ்வு மிக மிக அவசியமாகும். ஒழுக்கமான வாழ்வு எதனால் அமையும் ? அது தீவிர பரநாட்டத்தால் மட்டுமே அமையும். அத்தகைய தீவிர நோக்கமே தவம் எனப்படுகிறது.

இப்பொழுது பாருங்கள் ஆரம்ப நிலையும் தவமே. தியானத்தின் முதிர்ச்சியாகிய சமாதி நிலையும் தவமே. ஆகவேதான் இயம நியம விதிகளுக்குட்பட்டு வாழும் நல்வாழ்வும் தவம் என்று சொல்லப்பட்டுள்ளது. தவத்திலேயே தொடங்கி தவத்திலேயே முடிவு பெறுவதே வீடுபேறாகும். அல்லாத பேர்கள் விடுபட்ட பேர்களாவார்கள். அவர்கள் ஆசை வயப்பட்டு பிறவிப் பிணிக்கு ஆளாவார்கள்.

- Ram Manohar

Comments

Popular posts from this blog

அறம், பொருள், இன்பம், வீடு

பிரபஞ்சம் உருவானது எப்படி?

ஆழ்மன தியானம்