பற்று - துறவறம் & இல்லறம்
துறவறத்தைப் பொருத்த வரை உலகப் பொருட்களின் மீது கொள்ளும் பற்று புறப்பற்று எனப்படும். உயிர் மீது கொள்ளும் பற்று அகப்பற்று எனப்படும். இந்த இரண்டு பற்றுகளும் அற்று இருப்பதே துறவறம் எனப்படும்.
எந்தப் பொருள் மீது உள்ள பற்றை நாம் விட்டு விடுகிறோமோ, அந்தப் பொருளால் விளையும் துன்பங்களில் இருந்து நாம் விடுபடுகிறோம் என்பதுதான் உண்மை. பற்றுகள் நம்மைப் பற்றிக் கொள்கின்றன. தேன் குடிக்கப் போகும் வண்டின் கால்கள் அதில் மாட்டிக் கொள்வது போல, நாம் பற்றுகளில் அகப்பட்டுக் கொள்கிறோம். நாம் பற்று கொண்டோம். ஆனால், பற்றப்படுகின்றோம். நாம் அனுபவிக்க வந்தோம், ஆனால் அனுபவிக்கப்படுகிறோம். நாம் ஆள வந்தோம், ஆனால் ஆளப்படுகிறோம். இதுதான் பற்று கொண்டவர்களின் நிலை. பிறப்பு அறுக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் நாம் உடல் மீது கொண்ட பற்றை அறுக்க வேண்டும். பிறப்பு அறுபட வேண்டும் என்று நினைப்பவனுக்கு உடல் பற்று ஆகாது. உடல் ஒரு கருவி மாத்திரமே என்கிற எண்ணம் வலுப்பெற வேண்டுமேயன்றி, உடல் மீது பற்று கொள்ளலாகாது.
யான், எனது என்ற செருக்கறுபட்டால்தான் ஆன்ம ஞானம் வாய்க்கும், சிவலோகம் சித்திக்கும். இருவகைப் பற்றுகளையும் விடாமல் பற்றிக் கொண்டிருப்பவர்களைத் துன்பங்கள் இறுகப் பற்றிக் கொள்ளும். பற்று இருக்கும் வரை பிறப்பு உண்டு. பற்று அறுபட்டால் வீடுபேறு உறுதி. வீடுபேறுதான் பேரின்பம் தரவல்லது. இங்கே பற்றுகளால் நாம் அடைவது வெறும் இன்பம் மட்டுமே. நண்பர்கள், உறவினர்கள், மாடு, மனை மக்கள் என்று அனைத்திடமும் நாம் பற்று வைக்கிறோம். அவை இன்பத்தைத் தருவது போலவே துன்பத்தையும் தருகின்றன. துன்பமில்லாத பேரின்பம் வேண்டுமென்றால் எதன் மீதும் பற்று வைக்காமல் உறவாடப் பழக வேண்டும். அது எப்படி முடியும் ? முடியும் என்கிறார் திருவள்ளுவர். பற்றற்றான் பற்றினை பற்றினால் பற்றை அறுக்கலாம் என்கிறார். துறவறத்தில் இருப்பவர்களுக்கு பற்றற்று இருப்பதே அறம்.
இனி இல்லறத்தான் நிலை என்ன ? இல்லறத்தானுக்கு எத்தனையோ பற்றுகள் இருக்கின்றன. ஆயினும் அவன் ஒரே ஒரு பற்றினை அறுத்து விட்டால் போதும் மற்ற பற்றுகளின் துன்பங்கள் அவனைப் பற்றுவதில்லை என்பது முன்னோர்கள் வாக்கு. அது என்ன பற்று ? பிறன் மனை விழையாமல் இருப்பதே அப்பற்றாகும். அதுவே இல்லறத்தானுக்கு பற்றற்றிருப்பதாகும். பிறன் மனைவியை மனம் கொள்ளாதவனே ஆண் என்ற சொல்லுக்கு உரியவனாகிறான் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு இருப்பதே ஒழுக்கங்களிலெல்லாம் சிறந்த, உயர்ந்த ஒழுக்கமாக அற நூங்கள் அனைத்திலும் சொல்ப்பட்டுள்ளது. ஒரு இல்லறத்தான் எவ்வளவுதான் அறத்திற்கு மாறான பாவங்களைச் செய்தாலும், இந்த ஒரு அறம் அவனைக் காக்கும் என்பது சான்றோர் வாக்கு.
Comments
Post a Comment